மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளை பெரிதும் அச்சத்துக்கு உள்ளாக்கி வரும் மர்ம மனிதர்களினால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மர்ம மனிதர்களினால் மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைத் தணிக்க இராணுவத்தையோ அல்லது விசேட அதிரடிப் படையினரையோ ஈடுபடுத்த வேண்டாம். அங்குள்ள பொலிஸாரை மட்டும் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது மீதான பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறிய தாவது:
1983 ஆம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது மலையக மக்கள் அல்லோல கல்லோலப்பட்டனர். தற்போது அதேபோன்றதொரு நிலைமை மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மலையகப் பகுதிகளில் கிறிஸ் மனிதர்களின் நடமாட்டம் மற்றும் அடாவடி காரணமாக மலையக மக்கள் பீதியடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலுள்ள லயன் அறைகளிலிருந்து வெளியேறியுள்ள மக்கள் வெளி இடங்களில் காலத்தைக் கழிக்கின்றனர்.
இது சம்பந்தமாக நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷவிடம் தெரிவித்தேன். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
ஆயினும், கிறீஸ் மனிதர்களின் அடாவடித்தனத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியைத் தணிக்க இராணுவத்தையும், விசேட அதிரடிப் படையினரையும் மலையகப் பகுதிகளில் ஈடுபடுத்துமாறு சில அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதை நான் எதிர்கின்றேன். ஏனென்றால் வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டதாலேயே அங்கு பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கின. எனவே வடக்கில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை மலையகத்திலும் ஏற்படாதிருக்க விசேட அதிரடிப் படையினரையோ அல்லது இராணுவத்தையோ இந்தப் பிரச்சினைக்காக ஈடுபடுத்தாமல், அங்குள்ள பொலிஸாரை மட்டும் ஈடுபடுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோன்று, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக தடுப் பிலுள்ள மலையக இளைஞர்களை உடன் விடுவிக்குமாறு அரசிடம் கோருகிறேன் என்றார்
No comments:
Post a Comment