தமிழக தலைநகர் சென்னைக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் செல்வதென்பது குறைவாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் எதிர்வரும் 19- ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பயணத்தின்போது, ஹிலாரி சென்னை சென்று சில முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொள்வார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இப்பயணத்தின்போது தமிழக மக்கள் தாம் கொண்டுள்ள ஈழத்தமிழர் பற்றிய நிலையை ஹிலாரிக்கு உணர்த்துவார்களா என்பதே தற்போது எழும் கேள்வி.
வாய்ப்புக்கள் கிடைப்பது அரிது. அப்படியான வாய்ப்புக்கள் கிடைக்கும்போது தமதாக்கிக் கொள்வதே சாலச் சிறந்தது. ஹிலாரி அவர்கள் தமிழகத்தில் தங்கியிருக்கும் வேளையில் தமிழக மக்கள் தமது உணர்வுகளை உரத்துக் கூறினால் நிச்சயம் ஹிலாரி அம்மையார் அவர்கள் ஈழத்தமிழர் விடயத்தில் அதீத கரிசனை காட்டுவார் என்பது மட்டும் திண்ணம். ஏழு கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் மக்கள் பலம் என்னவென்று ஹிலாரி அம்மையாருக்கு அமைதி வழியில் புரியவைப்பதன் மூலமாக உலகத் தமிழர்களின் பலம் என்னவென்று ஹிலாரி அம்மையாருக்கு தெரியும். கிடைக்கப்பெற்றிருக்கும் அரிய சந்தர்ப்பத்தை தமிழக மக்கள் தவறவிடக் கூடாதென்பதுதான் உலகத்தமிழர்களின் அவாவாக இருக்கிறது.
ஹிலாரி கிளிண்டன் அவர்கள் இந்திய-அமெரிக்க தொழினுட்ப மற்றும் வர்த்தக உடன்பாடுகளை ஊக்குவிக்குமுகமாகவேதான் இப்பிரயாணம் அமைந்துள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார். வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் புதுடெல்லியில் நடைபெறும். வெளிநாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் அயல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என மேலும் தெரிவித்தார் குறித்த இராஜதந்திரப் பேச்சாளர்.
சிறிலங்கா விவகாரம் முக்கியத்துவம் பெறுமா?
புதுடெல்லிக்கும், வாஷிங்டனுக்கும் இடையில் சிறிலங்கா விவகாரம் குறித்த வழமையான கலந்துரையாடல் நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து புதுடெல்லியில் நடைபெறும் பேச்சுக்களில் கலந்துரையாடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஹிலாரி அம்மையார் இராஜாங்கச் செயலாளர் பதவிக்கு வந்து இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாக இப்பயணம் அமைந்துள்ளது. இந்தியாவுடன் நட்புறவை பேணுவதில் இவர் அதீத அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி வர்த்தகர்களை சந்தித்து, இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பைப் பேண வேண்டுமென்று தொடர்ந்தும் குரல் எழுப்புபவர்தான் ஹிலாரி. அத்துடன், கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தொழினுட்பவியலாளர்களையும் சந்தித்து இந்தியாவுடன் தொழினுட்பத்தை பெருக்க வேண்டும் என்று தொடர்ந்தும் குரல் எழுப்புவர்தான் ஹிலாரி அம்மையார். ஆகவே, புதுடெல்லிக்கு செல்லும் திட்டம் என்பது பெரிய விடயமாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
ஹிலாரி அவர்களின் சென்னை விடயம் என்பது பெரிதாக அலட்டிக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சென்னை சென்று பின்னர் தென் கிழக்கு நாடு செல்கிறார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சென்னையூடாக தென் கிழக்கில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவுக்கு செல்வதென்பது இலகுவான பிரயாணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், சென்னையில் தங்கி சிவில், சமூக மற்றும் அபிவிருத்தி விவகாரம் தொடர்பான கொள்கையாளர்களையும், அரச-சார்பற்ற அமைப்புக்களையும் அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், வர்த்தக குழுவினரையும் சந்தித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக வந்துள்ள செய்தி மிக முக்கிய இடத்தை பெறுகிறது. குறிப்பாக, அரசசார்பற்ற மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதனூடாக தமிழக மக்களின் ஆதங்கங்களை கேட்டறிவார் என்பது மட்டும் திண்ணம்.
பொதுமக்களின் பிரதிநிதிகள் தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துச்சொல்ல வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். அயல் நாடுகள் விடயங்கள் தொடர்பாக எந்தவிதப் பேச்சும் குறித்த சந்திப்புக்களில் இடம்பெறாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் அறிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை அமைதி வழியில் ஹிலாரி அம்மையாருக்கு வெளிப்படுத்த வேண்டியது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு. அவர்கள் அப்பணிகளைச் செய்யத் தவறினால், பொது மக்கள் திரண்டு தமது ஆதங்கங்களை தெரியப்படுத்த வேண்டும். ஆகவே, முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு, ஈழத்தமிழரின் பிரச்சினையைப் பற்றி தமிழக மக்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கிறார்கள் என்கிற விதத்தில் ஹிலாரி அம்மையாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஹிலாரியை ஜெயலலிதா சந்திப்பாரா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஹிலாரி கிளின்டனை சென்னையில் சந்திப்பாரா என்பது அடுத்து எழும் கேள்வி. ஈழம் வேண்டி போராடிய தமிழ் போராளிகளை தாம் அடக்கிவிட்டதாகத் தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் மீது தனது ஆக்கிரமிப்புப் படையை ஏவி பல்லாயிரம் மக்களைப் பலிகொண்ட மகிந்த அரசு ஈழத் தமிழருக்கு அரசியல் பிரச்சினை இல்லையென்கிற பாணியில் பேசி வருவது நகைப்புக்கிடமாகவே உள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையிலேயே ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து விவகாரங்களிலும் சரிசமனாக தமிழ் மக்களும் அத்தீவில் அனுபவிக்க வேண்டும் என்று சில வருடங்களாகக் கூறிவந்துள்ளார் ஜெயலலிதா. சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் சமவுரிமை அளிக்காமல் தமிழ் மக்களை அடக்க முற்பட்டால், தானே தமிழீழத்திற்கு ஆதரவாக செயற்படுவேன் என்று சில வருடங்களாகக் கூறிவந்தார் இவர்.
தமிழ் மக்களுக்குச் சமவுரிமை அளிக்கப்படமாட்டாது என்று மறைமுகமாகக் கூறி வருகிறார் மகிந்த ராஜபக்ச. ஆகவே, தமிழீழமே நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கு சென்று ஈழத்திற்காக பிரச்சாரம் செய்து இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறுவதே ஜெயலலிதாவின் அடுத்த இலக்காக இருக்க வேண்டும். இந்திய நடுவண் அரசின் அனுமதியின்றி வெளிநாடுகளின் தலைவர்களையோ அல்லது இராஜதந்திரிகளையோ சந்தித்து சிறிலங்கா விடயத்தில் எதனையும் ஜெயலலிதாவினால் செய்ய முடியாது. ஆகவே, இந்தியாவின் அனுமதி பெற்று ஹிலாரி கிளின்டனை சந்தித்து ஈழத்தமிழரின் நிலையை எடுத்துக்கூறுவாரா ஜெயலலிதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிறிலங்கா விடயத்தில் இந்தியாவின் நிலை மாறிவருவதாக சில அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் களத்தில் நின்றவேளையில்தான் தன்னால் எதனையும் ஈழத்தமிழர் விடயத்தில் செய்ய முடியவில்லை என்று கூறிவந்தது இந்தியா. இந்தியாவில் விடுதலைப்புலிகளைத் தடைசெய்துவிட்டு அவர்களுடன் பேச முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையை இந்தியா எதிர்கொண்டது என்றால் மிகையாகாது.
இன்று விடுதலைப்புலிகள் களத்தில் இல்லையென்கிற நிலைவந்த பின்னரும் இந்தியா தொடர்ந்தும் மௌனம் சாதிக்க முடியாது. அவ்வாறு தொடர்ந்தும் மௌனம் சாதித்தால் தனது எதிரி நாடுகள் சிறிலங்கா விடயத்தில் மூக்கை நுளைத்துவிடுவார்கள் என்று நன்கே அறிந்துள்ளது இந்திய நடுவண் அரசு. ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா ஒதுங்கியிருக்க மாட்டாது என்பது மட்டும் திண்ணம். அதனைப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளது இந்தியா.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ். சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான பிரஜைகள் குழுவை யாழ். ஆயர் இல்லத்தில் சமீபத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சிறிலங்கா அரசு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா தனது முழுப் பங்கையும் வழங்குமென மிஸ்ரா கூறினார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் மிக மூத்த இராஜதந்திரியான பார்த்தசாரதி முதல் இன்றைய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வரை பலரும் வந்து போகின்றனர். உடன்படிக்கைகளையும் கூட்டறிக்கைகளையும் வெளியிடுகின்றனர். அவையெல்லாம் எழுத்திலும் ஊடகங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன. எவையுமே செயல் உருப்பெறவில்லை. இந்நிலையில் இந்தியா இப்போதாவது தனது உணர்வுபூர்வமான பங்களிப்பை வழங்கி நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமாதானத்துக்கான பிரஜைகள் குழுவினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பிரதித் தூதுவர், 'கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். அவற்றை மறப்போம். 1987-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளாலும் ஒரு சாராரது விருப்பமின்மையினாலும் அவை வெற்றி பெறவில்லை. இவை நடந்து முடிந்தவை. இன்று நிலை அப்படியல்ல. நிரந்தரமான தீர்வுத் திட்டம் ஒன்றைக் காணவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை நடத்துகின்றன. இந்தப் பேச்சுக்கள் நம்பகத் தன்மை உடையதாகக் காணப்படுகின்றன. மனம் விட்டுப் பேசுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இப் பேச்சிலிருந்து இந்தியாவின் இன்றைய நிலை என்ன என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.
ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யவேண்டிய கடமை தமிழக மக்களுக்கு உண்டு. தமிழகத்தை ஆளும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, முன் எப்போதும் இல்லாத பொறுப்பு இப்போது சுமத்தப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியே உலகத்தமிழரின் காவலர் என்கிற பட்டத்தை ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளது.
ஆகவே, ஜெயலலிதா காலம் கொடுத்த பணியை செம்மனே செய்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், உலகத் தமிழர்களின் விடிவுக்கும் அயராது பாடு படவேண்டுமென்பதே உலகத் தமிழர்கள் அனைவரினதும் விருப்பம். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அவர்கள் சென்னை செல்லும் பொது தமிழக மக்கள் தமது ஈழத்தமிழரின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தி, உலக நாடுகளின் கவனத்தை ஈழத்தமிழர் மீது கொண்டுவர அயராது உழைத்திட வேண்டும்.
nithiskumaaran@yahoo.com
No comments:
Post a Comment