சிறிலங்காவானது தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு முகங்கொடுக்கத் தயங்குவதானது, சிறிலங்கா அரசாங்கத்தரப்பு உண்மையில் குற்றமிழைத்துள்ளது என்பதை ஆதாரப்படுத்தப் போதுமானதாகும்.
இவ்வாறு Col. R. Hariharan தென்னாசிய பகுப்பாய்வுக்குழுவின் [South Asia Analysis Group] வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கேள்வி பதில் வடிவில் அவர் முன்வைத்துள்ளவற்றை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அக்கேள்வி பதில்களாவது,
கேள்வி: சனல் 04 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றக் காட்சிகளைக் கொண்ட காணொலி உண்மையானது என நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இரு விடயங்கள் தொடர்புபட்டுள்ளன. இந்தக் காணொலியானது உண்மையானதா அல்லது இல்லையா என்பது முதலாவது விடயமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர்கள் உள்ளடங்கலாக பல திரைப்படத்துறை வல்லுனர்களால் இக்காணொலிக் காட்சிகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவைச் சேர்ந்த திரைப்பட வல்லுனர்கள் இக்காணொலிக் காட்சிகள் முற்றிலும் போலியானவை எனக் கூறுகின்றனர்.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக ஆணைக்குழுவானது தன்னால் ஆராயப்பட்ட விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இக்காணொலியைப் பயன்டுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்றை உள்நாட்டிலோ அல்லது அனைத்துலக ரீதியிலோ மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டிவருவதானது இரண்டாவது விடயமாகும்.
ஆரம்பத்திலிருந்தே சிறிலங்கா அரசாங்கமானது, ஊடகவியலாளர்கள் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்குவதில் தயக்கம் காட்டியது.
சிறிலங்கா அரசாங்கமானது தனது ஆளுமையைப் பயன்படுத்தி யுத்த வலயத்தில் அகப்பட்ட மக்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியிருக்க முடியும்.
இதனால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றியிருக்க முடியும். இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கமானது, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியையே வழங்கியிருந்தது.
இந்த மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளைக் கூட சிறிலங்கா அரசாங்கமானது, ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கவில்லை. யுத்தம் முடிவுற்ற பின்னர், தம்மிடம் கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளின் பெயர்களை இன்னமும் சிறிலங்கா அரசாங்கம் வெளியிடவில்லை.
சிறிலங்காவில் இடம்பெற்ற குருதி தோய்ந்த யுத்தமானது முடிவிற்கு வந்து இரு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பாலகுமாரன், ரமேஸ் போன்ற பல புலி உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளைக் கூட அரசாங்கம் இன்னமும் ஆரம்பிக்கவில்லை.
மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்ற நிலையில், குறிப்பிட்ட சில யுத்தக்குற்றங்களாவது மிகவும் உண்மையானவை என நான் உறுதியாக நம்புகிறேன். அத்துடன் இந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது.
கேள்வி: இந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கமானது சரியான முறையில் கையாண்டுள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: எந்தவொரு பொறுப்பான அரசாங்கமும் தனது ஆட்சியைப் பாதிக்கும் விடயங்களுக்கு கூடிய முன்னிரிமை வழங்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.
இதனை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்த விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் கூட, சிறிலங்காவில் வாழும் பெரும்பாலனவர்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறிலங்கா அரசாங்கம் உடனடி விசாரணைகளுக்கு முகங்கொடுக்க முன்வரவேண்டுமு; என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதன் விளைவாக, சிறிலங்கா மீது கொண்டிருந்த மதிப்பானது பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான விடயத்திற்கு அதி முன்னுரிமை கொடுத்து அதனைக் கையாள்வதில் சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி: சில மேற்குலக நாடுகள், தமது நாடுகளுக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தத்தின் காரணமாக அல்லது அனைத்துலக அரசியல் அதிகாரத்தின் ஒரு பகுதியாகவே சிறிலங்கா மீது தமது எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர் என அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக சிறிலங்காவில் வாழும் சிலர் கருதுகின்றனர். இது தொடர்பான தங்களின் கருத்தை வழங்கவும்?
பதில்: சிறிலங்கா உள்ளடங்கலாக அனைத்து நாடுகளும், பிற நாடுகளில் இடம்பெறும் செயற்பாடுகளைத் தமது சொந்தக் கண்ணோட்டங்களிலேயே பார்க்கின்றனர் என்பது உண்மையான விடயமாகும்.
ஆகவே சிறிலங்கா விடயத்திலும் ஏனைய நாடுகள் தமது நாட்டு அரசியல் கொள்கைகள் மற்றும் சொந்த மக்களின் அழுத்தங்கள் போன்றவற்றைக் கருத்திற்கொள்கின்றார்கள். அரசியல் அதிகாரத்துவம் என்பது, பூகோள – அரசியல் உண்மைத் தன்மையின் ஒரு பகுதியாகும்.
புவியியல் ரீதியாக மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சிறிலங்கா போன்ற நாடுகள் தொடர்பான விடயங்களும் இந்த வகையிலேயே அணுகப்படுகின்றது.
தற்போது சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்து வரும் அதே அனைத்துலக சமூகம் தான் 2002ல் சிறிலங்காவில் ஒரு சமரச உடன்பாட்டை மேற்கொள்வதற்காக சில பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதியைக் கொண்டு வரத் தீர்மானித்திருந்தது.
ஆனால் சிறிலங்காவில் சமாதானத்தைக் கொண்டு வருவதில் முன்னின்ற பெரும்பாலான நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடைசெய்திருந்தன.
இந்த நாடுகள் சிறிலங்காவில் உள் நாட்டுப் போர் இடம்பெற்ற காலத்தில், விடுதலைப் புலிகளின் அனைத்தலக ஆயுத தளபாட வழங்கற் தொடரைத் தடுத்த நிறுத்தவதற்காகச் செயற்பட்டன.
இருப்பினும், இறுதி யுத்த களத்தில் சிறிலங்கா தரப்பால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களின் காரணமாக, விடுதலைப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவிற்கு உதவி புரிந்த அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கூட தற்போது சிறிலங்கா மீது தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. இவர்கள் முதலில் உதவி செய்த அதே சிறிலங்காத் தலைமையை தற்போது ஏன் இந்த நாடுகள் எதிர்த்து நிற்கவேண்டும்?
கேள்வி: தற்போது சனல் 04 தொலைக்காட்சிச் சேலையால் வெளியிடப்பட்டுள்ள காணொலியானது, விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழம் ஆகியவற்றிற்குப் புத்துயிர் வழங்க விரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலி ஆவணம் என சிறிலங்கர்கள் பலர் கருதுகிறார்கள். இது தொடர்பான தங்களது அபிப்பிராயத்தைக் கூறமுடியுமா?
பதில்: சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் என்பது விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என புலம்பெயர் தமிழர் சமூகம் கருதுகின்றது.
எது எவ்வாறிருப்பினும், சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்டுள்ள காணொலியானது, புலிகளின் செல்வாக்குடன் தயாரிக்கப்பட்டது எனக் கூறுவதில் எந்தவொரு நம்பகத்தன்மையும் இல்லை.
ஏனெனில் விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது செயற்படு நிலையில் இல்லை. இந்த அடிப்படையில், சிறிலங்காவானது தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு முகங்கொடுக்கத் தயங்குவதானது, சிறிலங்கா அரசாங்கத்தரப்பு உண்மையில் குற்றமிழைத்துள்ளது என்பதை ஆதாரப்படுத்தப் போதுமானதாகும்.
இவற்றுக்கப்பால், சிறிலங்கா அரசாங்கமானது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்குள் புதைந்து கிடக்கும் மனவேதனையை வெறுமன அசட்டை செய்து சமாளித்து விட முடியாது.
புலம் பெயர் தமிழர் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்டுள்ள காணொலி உள்ளடங்கலாக எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கத் தயாராகவுள்ளனர்.
உலகின் எந்தவொரு பகுதிகளிலும் யுத்தக் குற்றங்கள் இடம்பெறும்போது மிக உன்னிப்பாக அவதானிக்கின்ற அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்கா விடயத்திலும் தமது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். இவை அனைத்தும் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கின்றன.
கேள்வி: தற்போது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இன இணக்கப்பாட்டு முயற்சியானது, சிறிலங்கா மீதான யுத்தக் குற்றங்கள் காரணமாக பின்தள்ளப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
பதில்: தற்போது உண்மைத்தன்மை வாய்ந்த இணக்கப்பாட்டு முயற்சிகள் சிறிலங்காவில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறதா? இது அபிவிருத்தி என்ற பெயரில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு தொடர்பாக மீள ஒரு தடவை பாருங்கள். 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. APRCயும் அதனால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இன இணக்கப்பாடு விடயத்தில், இவ்வாறு மாற்றங்கள் அடிக்கடி இடம்பெறும் போது உண்மையான இணக்கப்பாடு என்பது சாத்தியப்படுமா?
இந்த அடிப்படையில், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது அசட்டை செய்தால், இணக்கப்பாட்டு நடவடிக்கைகளும் உண்மையில் பாதிப்பிற்குள்ளாகும்.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான நடுநிலையான விசாரணையும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் சிறிலங்காவில் உண்மையானதொரு இணக்கப்பாடொன்றை உருவாக்கத் துணைபுரியும்.
கேள்வி: யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டால், யுத்த வெற்றி மூலம் சிறிலங்கா இராணுவத்தினர் பெற்றுக் கொண்ட கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: ஒரு இராணுவத்திற்கான கௌரவம் என்பது யுத்தத்தை வெற்றிகொள்வதன் மூலம் மட்டும் பெற்றுக் கொள்ள முடியாது. இது யுத்தத்தை எவ்வாறு நடாத்திச் சென்றுளள்து என்பதிலும் ஒரு இராணுவத்தின் கௌரவம், மதிப்பு தங்கியுள்ளது.
யுத்தக் குற்றச்சாட்டு விசாரணை என்பது முழு இராணுவத்தினரிடமும் மேற்கொள்ளப்படமாட்டாது. யுத்த விதிமுறைகளை மீறிய ஒரு சில இராணுவ வீரர்கள் மட்டுமே விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும்.
இராணுவத்திலுள்ள சிலருக்கு எதிராக மட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அந்த இராணுவம் சகல இனக்குழுமங்களாலும் ஒரு உண்மயான தேசிய இராணுவம் என்ற புகழைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கேள்வி: சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பாளியாவதற்கு இந்தியாவும் பங்கு வகித்துள்ளது என நீங்கள் நினைக்கவில்லையா?
பதில்: நிச்சயமாக, சிறிலங்காவுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள இந்தியாவானது, இந்த விடயத்தில் இராமயாணத்தில் வருகின்ற அனுமான் போன்று மிகப் பிரதான பங்கு வகித்துள்ளது.
ஆனால் புதுடில்லியானது இந்த விடயத்தில் உறுதியான நம்பிக்கையுடன் இருப்பது போல் தெரியவில்லை. சிறிலங்கா அரசாங்கம் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ் மக்கள் ஆகிய இரு தரப்புக்களையும் சமாளிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தற்போது புதுடில்லியை ஆளும் கூட்டணிக்கட்சி உள்ளது.
தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவானது, புதுடில்லி மத்திய அரசாங்கமானது தனது நிலைப்பாட்டில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா சிறிலங்கா விடயத்தில் மிகவும் கடும்போக்கைக் கடைப்பிடித்த வருகிறார். இந்த விடயத்தில் இந்தியாவானது மிகத் தெளிவான வெளிப்படையான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிவரும் என நான் எதிர்பார்க்கிறேன்.
கேள்வி: சிறிலங்காவில் ஈழப்போரானது முடிவிற்கு வந்ததுடன் அங்கு எல்லாம் மிகச் சிறப்பாக உள்ளது என்ற காரணத்தினாலா சிறிலங்கா தொடர்பான விடயங்களை தற்போது நீங்கள் பெருமளவில் எழுதுவதில்லை?
பதில்:
01. நான் கடந்த ஐந்து மாதங்களாக இந்தூர், ராய்ப்பூர் போன்ற இடங்களிலுள்ள இந்திய முகாமைத்துவக் கல்லூரிகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளளேன். இதனால் தற்போது எனக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. அடுத்த மாதமளவில் இக்கற்பித்தல் செயற்பாடு முடிவிற்கு வருவதை அடுத்து மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என நம்புகிறேன்.
02. ஒரு இராணுவ ஆய்வாளர் என்ற ரீதியில், ஈழப்போர் இடமபெற்ற காலப்பகுதியில் இது தொடர்பான களநிலவரங்களை எழுதுவதில் நான் மிகவும் உந்தப்பட்டிருந்தேன். [அரசியல் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்வதில் நான் பெரிதும் விருப்பம் காண்பிப்பதில்லை. ஏனெனில் யுத்தத்தில் கடைப்பிடிக்கப்படுவதைப் போன்று அரசியலில் வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் காணப்படுவதில்லை.] சிறிலங்காவில் யுத்தமானது முடிவிற்கு வந்தபோதிலும், அங்கு நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் இன்னமும் தீர்வு காணப்படாததால் சிறிலங்காவில் எல்லா நிலைமைகளும் சிறந்த முறையில் உள்ளது என என்னால் சொல்ல முடியாது.
[Col R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, served with the Indian Peace Keeping Force in Sri Lanka as Head of Intelligence. He is associated with the Chennai Centre for China Studies and the South Asia Analysis Group.]
Home »
அதிகாரி
,
அமெரிக்க
,
கண்காணிக்கவே
,
தேர்தல்
,
நிலைமையை
,
யாழ்.சென்றார்
,
வடக்கு
» வடக்கு தேர்தல் நிலைமையை கண்காணிக்கவே அமெரிக்க அதிகாரி யாழ்.சென்றார்
வடக்கு தேர்தல் நிலைமையை கண்காணிக்கவே அமெரிக்க அதிகாரி யாழ்.சென்றார்
Written By Eve on Sunday, July 17, 2011 | 10:44 PM
Labels:
அதிகாரி,
அமெரிக்க,
கண்காணிக்கவே,
தேர்தல்,
நிலைமையை,
யாழ்.சென்றார்,
வடக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment