Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » ஈழத் தமிழரை அழித்தவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது - அனலை நிதிஸ் ச. குமாரன்

ஈழத் தமிழரை அழித்தவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது - அனலை நிதிஸ் ச. குமாரன்

Written By Eve on Tuesday, July 12, 2011 | 2:28 AM

நாதியற்ற தமிழனை அழித்தால் யாரும் தட்டிக்கேற்கமாட்டார்கள் என்கிற இறுமாப்பில் இருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரண்டு போர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள்.

பிரித்தானியாவைச் சேர்ந்த “சனல்-4" தொலைக்காட்சியின் “சிறிலங்காவின் கொலைக்களம்" என்கிற பெட்டக நிகழ்ச்சி பலரின் மனக்கதவை திறக்கவைத்துள்ளது.

மே 2009-இல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் பல அடுக்கடுக்கான உண்மை நிகழ்வுகளை சனல்-4 தொலைக்காட்சி வெளிக்கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் இத்தொலைக்காட்சி தனது ஊடகத் தர்மத்தை நெஞ்சில் சுமந்து தர்மத்திற்காக குரல் கொடுக்கிறது. இப்படியான நிறுவனங்களை உலகத்தமிழர்கள் போற்றுவதுடன் தம்மாலான ஆதரவை நல்கி இவர்களின் சேவையைப் பல மடங்காக்க ஊக்கமளிக்க வேண்டும்.

ஈழத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சனல்-4 தொலைக்காட்சி மிகத் தெட்டத்தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுடன் உலகப் பத்திரிகைகள் மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டுவந்தது.

அதுமட்டுமல்லாமல் வெகுவிரைவில் ஐந்து இலட்சம் பிரதிகளை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதிகள் வெளிவந்தால் நிச்சயம் சிங்கள அரசுக்கு ஆதரவளிக்கும் பல நாடுகள் தமது நிலையை பரிசீலிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துவந்த ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் ஒளிபரப்பாகிய சிறிலங்காவின் கொலைக்களம் என்கிற பெட்டக நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் கடம் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதை பகிரங்கமாகவே கேட்டுள்ளார்.

நான்காம் கட்ட இறுதி யுத்தத்தின் போது சுமார் 40இ000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐநாவின் மனித உரிமை ஆணைக்குழு மீள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கெவின் ரூட் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன். இருப்பினும் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. ஜெனீவாவிலுள்ள அவுஸ்ரேலிய உயர் ஸ்தாகனிகராலயத்தின் ஊடாக மனிதவுரிமை ஆணையகத்திற்கு இந்த ஆதாரங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தான் கோரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல தமிழ் மக்களை சிங்கள அரச படையினர் சிறைச்சாலையில் அடைத்துவைத்து பல அட்டூழியங்களைக் குறித்த சிறைவாசிகளுக்கு செய்தது. குறித்த பல சிறைவாசிகள் தற்போது விடுதலைபெற்றோ அல்லது பணத்தை கொடுத்தோ நாட்டை விட்டு தப்பித்து மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒன்றிணைத்து குறிப்பிடப்பட்டவர்களை நேரடி சாட்சிகளாக இணைத்து சிங்கள அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக உலக நீதிமன்றங்களில் வழக்குப்போட சில அமைப்புக்கள் முயற்சிகளை எடுத்துவருகின்றன. இப்படியாக பல வழிகளில் சிங்கள அரசுக்கு எதிராக வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சிங்கள அரச தரப்பின் தொடர் மறுதளிப்பு

தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கும் போரில் பொதுமக்கள் எவரும் சாகவில்லை என்று சமீப காலம்வரை கூறிவந்த சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்கள். போர் நடந்த சமயத்தில் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளராக இருந்தவரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜயசிங்கஇ போரின் இறுதிக் கட்டத்தில் 5இ000 பொதுமக்கள் மட்டுமே பலியாகினார்கள் என்று கூறியுள்ளார்.

பிபிசி தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கும் போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் “படை நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதே தமது கொள்கையாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

போர் முடிந்து 26 மாதங்களான பின்னர் அரசுக்கு எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இப்போதாவது தெரியுமா என்று பிபிசி பேட்டியாளர் ஸ்டிபன் சக்கர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ராஜிவ் விஜயசிங்க ஒட்டு மொத்தமாக 5000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார். இதில் பெரும்பான்மையானவர்கள் டிசம்பர் 2008-ஆம் ஆண்டுக்கும் மே 2009-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பானதும் பொறுப்பற்ற தன்மையுமான தகவல்கள்தான் இதுவரை காலமும் தொடர்ந்தும் கூறிவந்துள்ளது என்பது விஜயசிங்கவின் பேட்டியிலிந்து தெரிகிறது. ஹிட்லரின் பிரச்சாரத்தலைவரையும் மிஞ்சுமளவு சிங்கள ஆட்சியாளர்கள் இருந்தே வந்துள்ளார்கள் என்பது எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் தெரிகிறது. இப்போதாவது உலக நாடுகள் சிங்கள அரசு தரும் அறிக்கைகளுக்கு முன்னுரிமை தரக்கூடாது என்பதே உலகத் தமிழரின் அவா.

சிறிலங்காவின் ஐநாவுக்கான தூதுவர் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணங்கள் பொய் என்றும் உலக நாடுகள் குறித்த ஒளிப்படங்களை நம்பவேண்டாம் என்றும் கூறுகிறார். சிறிலங்கா அரசு தமிழ் மக்களைக் கொலை செய்யவில்லையென்றும் உலக நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு கட்டமாகவேதான் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் செய்ததாகவும் அதில் அதீத வெற்றியை சிறிலங்கா அரசு பெற்றதாகவும் இவர் கூறுகிறார்.
விடுதலைப்புலிகளே தமிழர்களைக் கொன்றார்கள் என்று அப்பட்டமான பொய்யையே கூறி தனது அரசு செய்த போர்க் குற்றத்தை மறைக்க முயற்சி செய்கிறார் இவர். முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயலும் முயற்சியாகவே இவற்றின் இராஜதந்திரவழிப் பிரச்சாரம் அமைகிறது. ஆனால் உலக நாடுகள் இவரின் பேச்சை இனிமேலும் கேட்கத் தயாராக இல்லை என்பது மட்டும் உண்மை.

சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் சர்வதேச தரப்புக்கள் அனைத்துமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கி தம்மைக் கேள்வி கேட்பவர்கள் அனைவருமே எதிரிகள் என்ற எழுதாத கோட்பாட்டினைச் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்துவருகிறது.

இவ்வாறான ஒரு நிலையில் போர்க்குற்ற அரசான மகிந்த ராஜபக்ச தரப்பினரின் உண்மையான முகத்தினை சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும் சனல்-4 தொலைக்காட்சியின் “சிறிலங்காவின் கொலைக்களம்" பெட்டக நிகழ்ச்சி உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவேதான் இவைகள் அனைத்துமே பொய் என்கிற வாதத்தை சிங்கள அரசு முன் வைக்கிறது. ஆனால் சனல்-4 தொலைக்காட்சியோ குறித்த ஒளி நாடாக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த ஒளிநாடாக்களை ஐநா சபை கூட உண்மை என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியது. இப்படியிருக்க சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுதளிப்பதை வைத்துப்பார்க்கும்போது ஆயிரம் முறை பொய் சொல்லியாவது வெற்றி பெறலாம் என்று மனப்பால் குடிக்கிறது போலும். ஒன்றை மட்டும் சிங்கள ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்னவெனில் ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லலாம் ஆனால் இவைகள் பல எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பது மட்டும் உண்மை.

போர்க் குற்றத்திலிருந்து தப்பவே முடியாது

சிறிலங்காவின் இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இடமுண்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்த ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. எனினும் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “2002-ஆம் ஆண்டு ரோம் சர்வதேச சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறிலங்கா அரசாங்கம் அதில் கையெழுத்து இடவில்லை. இதில் கையெழுத்து இடாத நாடாக இருந்தாலும் ஐநாவின் பாதுகாப்பு சபையின் கோரிக்கையின்படி நெதர்லாந்தின் ஹெய்ட் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளைக் கொண்டு செல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதே நிலைமையே சு10டானின் ஜனாதிபதி பசீருக்கு ஏற்பட்டதாக தெரிவித்த அவர் சு10டானும் சிறிலங்காவைப் போன்று இந்த சாசனத்தில் கையொப்பம் இடவில்லை எனக் கூறினார்.

உலக சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளிலிருந்து எப்படியேனும் தன்னை காத்துக்கொள்ளலாமென்று மனப்பால் குடிக்கும் சிங்கள அரசிற்கு தொடர்ச்சியாக பல இடர்கள் வந்து கொண்டே இருக்கிறது. உலக மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் பல நாடுகள் தொடர்ந்தும் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதை கூறி வருகின்றன. தண்டனைக்குரியவர்கள் தண்டனையைப் பெறும்வரை குறித்த அமைப்பினரோ அரசுகளோ ஓயப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. இன்னும் பல ஆதாரங்களைத் திரட்டும் வேலைகளிலேயே பல அமைப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தண்டனைக்குத் தேவையான சாட்சிகளை சிறப்பாக சேர்ப்பதனாலேயே சிங்கள போர்க் குற்றவாளிகளுக்கு நிரந்தரத் தண்டனையைப் பெற்றுத்தர முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை வைத்தாவது தனது இராஜதந்திர காய்நகர்த்தலை செய்யலாமென்று காத்திருக்கிறார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சமீபத்தில் ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை நியூ யோர்க்கில் வைத்து சந்தித்தார் ரணில். அதுமட்டுமில்லாமல் புதிதாக பதவியேற்றிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ரணில். இந்தியாவைப் பணியவைத்து சிறிலங்காவுக்கு எதிராக இந்தியாவைத் திசைமாற்றி விடுவாரோ என்கிற மனப்பயத்தில் இருக்கிறது சிங்கள அரசு. இதனை மனதில்வைத்துத்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முனைப்புக் காட்டுகிறார் ரணில்.

ராஜபக்சாவை சந்திக்க ஜெயலலிதா ஒப்புதல் அளிக்கமாட்டார். அப்படி ஒப்புதல் அளித்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்கே தெரியும். இதை மனதில் வைத்துத்தான் ரணில் மூலமாக ஜெயலலிதாவை தனது கைக்குள் கொண்டுவரும் வேலைத்திட்டத்தை தீட்டியுள்ளார் மகிந்த ராஜபக்ச போலும்.

போர்க்குற்றவாளிகளைத் தப்பிக்க யார் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் நிச்சயம் போர்க்குற்றம் புரிந்தவர்கள் உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்குவது உறுதியாகிவிட்டது. கடவுளே வந்தாலும் ஈழத்தமிழருக்கெதிராக போர்க்குற்றம் புரிந்தவர்கள் தப்பவே முடியாது. தப்புவதற்காக எவ்வித முயற்சிகளை எடுத்தாலும் அவைகள் அனைத்துமே முறியடிக்கப்பட்டு ஈழத்தமிழரின் நீதிக்கான பயணம் வெற்றி நடைபோடும் என்பது மட்டும் உண்மை. உலக மனிதவுரிமை அமைப்புக்களென்றாலும் சரி உலகத்தமிழர்கள் என்றாலும் சரி தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவிலில்லை என்பதை மனதில்வைத்து கடமை புரிவதே காலமிட்ட கட்டளை.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger