தனது வல்வெட்டித்;துறை வீட்டிலிருந்து பன்னிரண்டு மைல்தூரம் மிதிவண்டியில் அவர் ஆங்கிலப் படம் பார்க்க யாழ் நகர் வருவார். அனேகமாக ஒரு நண்பனையும் ஏற்றிக்கொண்டு வருவார். அவருக்கு மிதிவண்டி ஓட்டம் நன்றாகப் பிடிக்கும். வயது வந்த பிறகு அவருக்கு மிதிவண்டியில் பயணிக்க வசதி கிடைக்கவில்லை.ஆங்கிலப் படங்களில் சண்டைப் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவருடைய ரசனைகள் விரிவடைந்தது. அப்போது நியாயம், நீதிக்காகவும், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட வலுவற்றோருக்காகவும் போராடும் கதாநாயகர்களின் படங்களைப் பார்ப்பார்.தமிழ்ப் படங்களை அவர் விட்டு வைக்கவில்லை. முன்பு பட மாளிகைகளில் படம் பார்த்தவர் காலப் போக்கில் வீடியோவில் தமிழ், ஆங்கில படங்களைப் பார்ப்பார். அவருடைய வாழ்க்கையில் திரைப்படங்கள் பெரும் பங்கு வகித்தன. அவர் மிகவும் துல்லியமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்த்தார்.
தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய அவருடைய பொதுவான விமர்சனம் பின்வருமாறு. மேடை நாடகப் பாரம்பரியத்தில் இருந்து தமிழ்த் திரைப்படத்தால் விலகிச் செல்ல முடியவில்லை. என்ன விதப் புதுமையைப் புகுத்தினாலும் நாடகச் சாயல் தொடர்கின்றது என்று அவர் சொல்வதுண்டு.என்றாலும் அவர் தமிழ்ப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். வன்னியில் போராட்டத் தயாரிப்புக்களில் ஈடுபடும் ஆரம்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி மலேரியா குரப்பன் காய்ச்சல் வருவதுண்டு. நடுங்கிக் கொண்டு படுக்கையில் கிடவாமல் தடித்த போர்வையால் உடலைப் போர்த்திக் கொண்டு வீடியோ பேழையில் படம் பார்ப்பார்.குடும்ப உறவுகளுக்கு இடையிலான ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்கள், அடிதடிகள், நடனம், பாட்டு, அழுகை, கண்ணீர், தனியொருவன் ஐம்பது பேரை அடித்து விரட்டும் காட்சிகள் இவை தானா தமிழ்ப்படங்கள் என்று அவர் கேட்பார். ஆனால் சலிப்புற்றுத் தமிழ்ப்படம் பாராமல் விட்டதில்லை.
ஆங்கிலக் கதாநாயகர்களில் அவருக்கு கிளின்ற் ஈஸ்ற்வூட் (Clint Eastwood) அவர்களை மிகவும் பிடிக்கும். பிற்காலத்தில் கலிபோர்னியா அரசியலில் தடம் பதித்த சிளின்ற் ஈஸ்ற்வூட் நியாயம், நீதிக்காகத் தனியொருவனாக இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் படங்களில் போராடுவார்.
No comments:
Post a Comment