Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » புனரமைப்பின் பேரில் பழைய பூங்கா அழிப்பு : உடந்தையாக இருந்தோர் யார்?

புனரமைப்பின் பேரில் பழைய பூங்கா அழிப்பு : உடந்தையாக இருந்தோர் யார்?

Written By Eve on Friday, September 30, 2011 | 2:58 AM

புனரமைப்பு மற்றும் மக்களுக்குத் திறந்து விடுதல் என்ற போர்வையில் பழைய பூங்காவை அழிக்கும் நடவடிக்கைகள் நேற்றும் யாழ். மாநகர சபையால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பணிகள் ஆளுநர் மற்றும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் மேற்கொண்ட தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிய வந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாநகர முதல்வர் ஆகியோருக்கு இந்தத் திட்டம் குறித்து முன்னரே தெரிந்திருந்த போதும் இதனைத் தடுப்பதற்கோ பழைய பூங்காவைப் பாதுகாப்பதற்கோ நடவடிக்கை எடுக்காது  அவர்களும் உடந்தையாக இருந்தார்கள் என்றும் அறிய வந்தது.

“பூங்காவை அழிக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பாதுகாப்பு அமைச்சு செயலர் மற்றும் ஜனாதிபதியின் செயலர் ஆகியோருக்கு முறையிட்டபோதும் இதுவரை எதுவிதப் பதிலும் கிடைக்கவில்லை” என்று யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்துக்காக அமைச்சர் பஸில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோதே ஆளுநர் தலைமையில் பழைய பூங்கா அழிப்புக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதன் பின்னர் பூங்கா புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கு என பொருளாதார அமைச்சினால் 220 மில்லியன் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
அது குறித்து யாழ். மாவட்ட அரச அதிபருக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படாமல், இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பொருளாதார அமைச்சின் திட்டப்படி பழைய பூங்காவில் உள்ள குளத்தினைப் புனரமைத்து, அங்கு பூங்காவுக்குரிய வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி பாதுகாப்பு வேலியையும் அமைத்த பின்னர் சுற்றுமதிலை அகற்றுவது எனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநர் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு பூங்காவை அழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளார் என்று தெரியவந்தது.

இது குறித்து மூத்த அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளையும், பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ். அரச அதிபரிடம் அனுமதி பெறுங்கள் என்று கூறப்பட்டதையும் கூட புறக்கணித்த ஆளுநர், “”வடக்கின் ஆளுநராக நானே இருக்கும்போது எதற்கு அரச அதிபரிடம் அனுமதி கேட்க வேண்டும்” என்று வீறாப்புப் பேசிவிட்டே பணிகளைத் தொடங்குவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger