Headlines News :

Meenakam News World

Home » , , , , » அவசரகாலச் சட்ட நீக்கம்-அரசின் அடுத்த நகர்வு என்ன?

அவசரகாலச் சட்ட நீக்கம்-அரசின் அடுத்த நகர்வு என்ன?

Written By Eve on Monday, September 5, 2011 | 3:13 AM

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தாலும், அதனுடைய பலன்கள் நாட்டு மக்களுக்குச் சென்றடையப்போவதில்லை என்பதை உணர்த்துவதாகவே அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் அமைந்திருக்கின்றன.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அவசரகாலச் சட்டத்தை நீக்கியதால் ஏற்படக் கூடிய ‘அடக்குமுறைச் சட்டங்களுக்கான வெற்றிடத்தை” நிரப்புவதற்காக ‘அவசரகாலச் சட்டவிதிகள் முன்னேற்பாடுகள்” என்ற பெயரிலான சட்டமூலமொன்று நடைமுறைக்குக் கொண்டுவரப்படவிருக்கின்றது. இதுதொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் இது பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்படும் எனவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையால் கிடைக்கக்கூடிய பலன்களை இல்லாமல் செய்வதாக இந்தப் புதிய சட்டமூலங்கள் அமைந்திருக்கும் என்பதை நீதி அமைச்சர் ராவூப் ஹக்கீம் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

போர் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு சந்தர்ப்பத்தில், வெளிநாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவும்தான் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது என்ற திடீர் முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்துக்கொண்டார்.

ஜனநாயக நாட்டில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சாதாரண சட்டத்தின் கீழ் செயற்படுத்தவே அவசரகால சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன் வைக்கின்றேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூறியிருந்தார்.

இந்நிலையில், அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு, அவசரகாலச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த முக்கியமான சரத்துக்கள் சிலவற்றை பயங்கரவாத தடைச்சட்டத்தில் சேர்க்கப்போவதாக அரசாங்கம் அறிவித்தது.

பல வருடகாலங்களாக, பாராளுமன்றத்தில் மாதாந்தம்; அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் அயல் நாடான இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அவசரஅவசரமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அதே தினத்தில் இந்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக விவாதம் ஒன்று நடைபெற்றது. அன்றிரவு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணாவும் பாராளுமன்றத்தில் உரையாற்றவிருந்தார். அந்தப் பின்னணியிலேயே அவசரகாலச் சட்டத்தை நீக்குவது என்ற திடீர் முடிவை ஜனாதிபதி அறிவித்தார்.

இந்தியாவின் அழுத்தங்கள் மட்டுமன்றி, இலங்கை நிலை தொடர்பில் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றமையும் அரசின் இந்த முடிவுக்கான உடனடிக்கா ரணங்களில் ஒன்றாகும். இம்மாதம் 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் போது இலங்கை தொடர்பில் சில தீர்மானங்களைக் கொண்டுவருவதற்கு மேற்கு நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. இவை அனைத்துமே அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக அரசு வெளியிட்ட அறிக்கைக்கு பின்னணியில் செல்வாக்கைச் செலுத்தும் காரணிகளாக இருந்துள்ளன.

இந்த நிலையில், சர்வதேசத்தைச் சமாளிப்பதற்காக, அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும், அதன் மூலம் இவ்வளவுகாலமாக அனுபவித்த அடக்குமுறைச் சட்டங்களை வேறு வழிகளுடாக நடைமுறைப்படுத்துவதற்கே (அரசாங்கம்) திட்டமிட்டது. அதன் விளைவுதான் ‘அவசரகாலச் சட்டவிதிகள் முன்னே ற்பாடுகள்” என்ற புதிய சட்டமூலத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்க்கப்படும் முக்கியமான பலன்கள் இரண்டு:

1. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவும் இல்லாமல் வருடக்கணக்காக தடுத்துவைக்க ப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் நிலையில் கூட அரசாங்கம் இருக்கவில்லை.

2. அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும். இதன்மூலமாக இடம்பெயர்ந்த பெருந்தொகையான மக்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகும். குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து இராணுவமும் மீளப்பெறப்பட வேண்டும். தற்போது அவசரகாலச் சட்டத்துக்குப் பதிலாக ‘அவசரகாலச் சட்டவிதிகள் முன்னேற்பாடுகள்” என்ற சட்டமூலத்தை நடைமுறைக்குக் கொண்டுவருதன் மூலம் இந்த இரண்டு பலன்களும் மக்களுக்குக் கிடைக்காமல் போகப் போகின்றது. ஆக, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அதன் முக்கிய அம்சங்கள் வேறு பெயரில் நடைமுறைப்ப டுத்தப்பட போகின்றது.

இந்த இரண்டையும்விட மற்றொரு நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டே அவசரகாலச் சட்டவிதிகள் முன்னேற்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அதாவது விடுதலைப் புலிகள் அமைப்பு அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ்தான் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவது புலிகள் மீதான தடையையும் வலுவற்றதாக்குகின்றது. ஆனால், ‘அவசரகாலச் சட்டவிதிகள் முன்னேற்பாடுகள்” இந்தத் தடையைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு உதவும். அதாவது, அவசரகாலச் சட்ட நீக்கம் என்ற அறிவிப்பு, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சி மட்டுமே. உள்நாட்டில் காணப்படும் ஒடுக்குமுறைகள் இதன் மூலம் குறையப் போவதில்லை.

அவசரகாலச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட எவரும், அது நீக்கப்பட்டமையால் நிவாரணம் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதுதான் உண்மை!

அவசரகாலச் சட்டத்தின் வரலாற்றைப் பொறுத்தவரையில், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலேயே இது நடைமுறையில் இருந்துள்ளது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இறுதி சட்டங்களில் ஒன்றாகவும் அது இருந்ததுடன், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழக்கூடிய அரசியல் முயற்சிகளுக்கு எதிராகவே அன்று இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் கடந்த 60 வருட காலத்தில் இச்சட்டத்தை ஆட்சிக்கு வந்த அரசுகள் அடக்குமுறைக்காகப் பயன்படுத்திக்கொண்டனர்.

இத்துடன் இணைக்கப்பட்ட மற்றுமொரு சட்டமாக 1979 இல் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட ‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை” குறிப்பிடலாம். இச்சட்டத்தின் பெயர் குறிப்பிடுவதைப் போல அரசியல்துறையில் திடீரென அதிகரித்த வன்முறையை ‘தடுப்பதற்காகவே” இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. இச்சட்டம் சுமார் 34 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து வருகின்றது.

அவசரகால அதிகாரங்களுக்கான அனுமதிகளை இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் அரசிற்கு வழங்குவதுடன் அவசரகாலச்சட்டம்அமுலில் உள்ள நிலையில் சில உரிமைகளுக்கு அச்சட்டம் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றது.

பொதுமக்களின் பாது காப்பு தொடர்பான நன்மை கருதியும், நாட்டில் ஒழுங்கை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காகவும், கலவரங்களை, குழப்பங்களை, மக்கள் எழுச்சிகளை கட்டுப்படுத்துவதற்காகவும், அல்லது பொதுமக்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமான பொருட்க ளையும் சேவைகளையும் தொடர்ந்து வழங்குவதற்காகவும் அவசரகாலச்சட்ட த்தைப் பிரகடனப் படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு ‘பொது மக்கள் பாதுகாப்பு சட்டம்” அச்சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் வழங்குகின்றது.

‘பயங்கரவாத தடுப்புச்சட்டம்” அடிப்படையில் ஓர் அவசரகாலச் சட்டமாக இல்லாத போதிலும் அதில் உட்படுத்தப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பான தற்காலிக ஏற்பாடுகள்| என்ற விதி, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு குற்றச் செயல்க ளுக்கான விரிவான சட்டதிட்டங்களையும், தேடுதல், கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பான பல அதிகாரங் களையும் உள்ளடக்கியதாகும். ஆனால், இச்சட்டமானது இலங்கையும் கைச்சாத்திட்டுள்ள மனித மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான பல சர்வதேச சட்டதிட்டங்களை மீறுவதாகவுள்ளது என்பதை மனித உரிமை அமைப்புக்கள் பலவும் சுட்டிக்காட்டியிருந்தன. மேலும், இச்சட்டம் காலவரையற்ற தடுத்து வைத்தலை அனுமதிப்பதாலும், பலவந்தப்படுத்துவதன் மூலம் ஆதாரங்களை பெறுவதற்கான அனுமதியை வழங்குவதாலும், சர்வதேச ரீதியான கண்டனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆரவாரமாக அறிவித்தாலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதும், ‘அவசரகாலச் சட்டவிதிகள் முன்னேற்பாடுகள்” என்ற சட்டமூலத்தை அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டுவர இருப்பதும் நாட்டு மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்தான் வாழப்போகின்றார்கள் என்பதையே உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.! தொடரும் அரசின் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜீவா சதாசிவம்

நன்றி – வீரகேசரி

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger