அவர்களைக் கலைத்துச் சென்றதில் பொது மக்களிடம் எந்தவொரு உள்நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. திருடர்களிடமிருந்து தங்களை – தங்கள் ஊரைக் காத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சி.
அவ் வேளையில் அந்த “அடையாளம் தெரியாத” அந்த நபர்கள் பொதுமக்களிடமிருந்து தப்பி கரையோரமாக அமைந்திருந்த இராணுவ முகாமுக்குள் புகுந்து கொண்டனர். கலைத்துச் சென்ற பொதுமக்கள் இராணுவ முகாமை அடைந்த போது அந்த “அடையாளம் தெரியாத” நபர்கள் முகாமுக்குள் நின்றதைப் பொது மக்கள் பலர் கண்டுள்ளனர். கொதித்தெழுந்த மக்கள் அவர்களை பொலீசில் ஒப்படைக்குமாறு கோரி இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக அவ்விடத்துக்கு வந்த இராணுவ மோர்ட்டார் சைக்கிள் அணி படையினருடன் வாக்குவாதத்திலீடுபட்டவர்களில் ஐந்து பேரைக் கைது செய்தனர் என்றும் தெரிய வருகின்றது.இவ்வேளையில் -
உடனடிமுகாமுக்குள் புகுந்த நபர்களை பின்புற வாயிலுக்கூடாக அப்புறப்படுத்தும் முயற்சியைப் படையினர் செய்ய, அதனை அறிந்த மக்கள் தொடர்ந்தும் அந்த “அடையாளம் தெரியாத” நபர்களைக் கலைத்துச் சென்றனர். அவர்கள் எவர் கையிலும் சிக்காமல் தயாராக நின்ற “கன்ரர்” வாகனமொன்றில் ஏறித் தப்பி விட்டனர்.இதனிடையே –ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தது போல பெருமளவான படையினரும், பொலீஸாரும் வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்டு, பொது மக்கள் மீது தடியடிப் பிரயோகமும், வானை நோக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.அந்த “அடையாளம் தெரியாத” நபர்களைத் துரத்திய பொதுமக்கள் கூட்டம் கலைந்ததும் அமைதியாக அவரவர் வீடுகளுக்குள் அடங்கிப் போய் விட்டனர்.கிட்டத்தட்ட நள்ளிரவு 11.30 மணியளவில் பிரதேசத்தில் படையினரைத் தவிர எவருமில்லை. மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் வீடுகளுக்குள் தூக்கத்தை;தெலைத்து விட்டு விழித்திருந்தனர்.அந்த நேரத்தில் தான் அந்த அராஜகம் அரங்கேறியது.நாவாந்துறைப்பிரதேசத்திலிருந்து வெளியேறவோ உள்வரவோ எவரும் அனுமதிக்கப்படவில்லை. இனவெறியும், மது வெறியும் தலைக்கேறிய சிங்களப்படைகள் ஊழித்தாண்டவத்துக்குத் தயாராகின. ஒட்டுமொத்தமாக நாவாந்துறையையும், அயல் கிராமங்களையும் சுற்றி வளைத்த படையினர் கேட்டுக் கேள்வியின்றி, வீடுகளுக்குள் அத்து மீறி நுழைந்து – பூட்டியிருந்த வீடுகளை உடைத்து உள் நுழைந்து வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடின்றி, நோய் வாய்ப்பட்டவர்களைக் கூட தற தறவென்று இழுத்துச்சென்றிருக்கின்றனர். தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் கண்முன்னே அடித்து உதைத்து இழுத்துச ;செல்வதைத் தடுக்க முயன்ற பெண்களும் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் இடம்பெற்றது சந்தையை அண்டிய பகுதியில், அங்கு கூடியிருந்தவர்கள் மட்டும் தான் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தனர், ஆனால் இங்கே எவ்வித வேறுபாடுமின்றி, கையில் கிடைத்தவர்கள் எல்லாம் இழுத்துச் செல்லப்பட்டார்கள். சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் வைத்து கை கால்கள் முறிக்கப்பட்டனர். மாட்டுப்பட்டவர்கள் எவரும் இனியொரு தரம் இவ்வாறானதொரு செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்பது போல எலும்புகள் நொருக்கப்பட்டன. மீள முடியாத அளவுக்குத் தாக்கப்பட்டனர்.ஏனைய இடங்களில் மர்ம மனிதர்களைப் பிடித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்களே படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். ஆனால் இங்கே ஒட்டு மொத்த கிராமமே பாதிப்புக்குள்ளானது. நாடகத்தை அரங்கேற்றி நர வேட்டை தொடங்கிய சிங்களப் படைகள் நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் பாடமொன்றைப் புகட்டுவதற்குத் தலைப்பட்டது,அதாவது – இன்று நாவாந்துறையில் நடந்தது, இனி எங்கும் நடக்கலாம், எங்கென்றாலும் நீங்கள் (தமிழர்கள்) அடங்கித்தான் ஆகவேண்டும், மாறாக ஆடினீர்கள் என்றால் இது தான் நடக்கும் என்பது தான் அது.ஆனால் நினைத்தது ஒன்று – நடந்தது மற்றொன்று.மக்கள் கொதித்தெழுந்ததை யாராலும் தடுக்க முடியவில்லை. இப்போதும் அந்தப்பகுதியில் மக்கள் கொந்தளித்த வண்ணமே இருக்கின்றனர்.மக்களுக்குப் பாதுகாப்பளிக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு மக்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதைத் தானே வெளிப்படுத்தி விட்டது இராணுவம்.யார் எவரென்றில்லாமல், வயது வேறுபாடின்றி மக்களைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தாக்கப்பட்டவர்களை கிட்டத்தட்ட 8 மணித்தியாலயங்களுக்கு மேல் தண்ணீர் கூட கொடுக்காமல் இரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவ ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் தடுத்து தவிக்க வைத்ததன் மூலம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் கூட அவமதிக்கப்பட்டிருக்கின்றன. என்ன தான் மேற்குலக நாடுகள் போர்க்குற்றம் பற்றியும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தொண்டை கிழியக் கத்தினாலும், நாங்கள் (ராஜபக்ஃஷ அன் பிரதர்ஸ்) நினைத்ததைத்தான் நடத்துவோம். பௌத்த சிங்கள நாடாகிய இலங்கையில் தமிழர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்குக் கூட நாதியற்றவர்கள் என்பதனைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது நாவாந்துறைச் சம்பவம்.ஆனால் -மறு புறத்தே இத்தகைய மக்கள் கொந்தழிப்புக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதனைச் சிந்திக்கத் தவறிவிட்டது அரசாங்கம். விடுதலைப் புலிகளின் காலத்தில் படையினருக்கெதிராக வீதிக்கு வீதி போராட்டங்கள் இடம்பெற்ற போது மக்கள் தூண்டி விடப்பட்டார்கள் என்று மக்கள் எழுச்சிக்குப் “புலிச் சாயம்” பூசிய அரசு, இப்போது உண்மையாக, உணர்வுபூர்வமாக, தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் மக்களால் முன்னெடுக்கப்படும் இத்தகைய போராட்டங்களுக்கு எவ்வாறு அர்த்தம் கற்பிக்கப்போகின்றது?
No comments:
Post a Comment