இலங்கை அரசு மீது இந்திய மத்திய அரசு; பொருளாதாரத் தடை; ஜெயலலிதா விடாப்பிடி; நாடாளுமன்றின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் சர்ச்சையைக் கிளப்பும்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இன்று தொடங்கும் இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தைத் தமது கட்சியின் உறுப்பினர்கள் எழுப்புவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
“இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எமது உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்புவார்கள்” என்றார் ஜெயலலிதா.
இன்று தொடங்கும் இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. தவிர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி ஆகியனவும் பாரதிய ஜனதாக் கட்சியும் இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசுக்கு இந்தக் கூட்டத் தொடரில் நெருக்கடி கொடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெரும் எழுச்சி நிலை உருவாகி வருகின்றது. கொழும்பு அரசு மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் இந்த நிலையை ஏற்படுத்தி உள்ளன.
அகில இந்தியக்கட்சிகளான இந்திய மார்க்ஸிட் கட்சி ஈழத்தமிழர் விவகாரத்தை இந்திய மாநிலங்கள் எங்கும் எடுத்துச்சென்று பிரச்சாரப்படுத்தும் செயல் திட்டத்தை ஏற்கனவே தொடங்கி நடத்தி வருகிறது.
மற்றொரு முக்கிய கட்சியான மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சனிக்கிழமை சென்னையில் பெரியார் திடலில் இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கலந்துகொண்டு பேசுகையில், “நடந்த அத்துமீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரிக்க வேண்டும். யாரால் எப்படி நிகழ்ந்தது என்பதையும் கண்டறிய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“இந்த மாநாட்டின் முக்கிய குறிக்÷காள், இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை மற்றும் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான். இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்களும், சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டனர். வன்முறை, அத்துமீறல் நடந்ததோடு, அந்தப் போரில் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக ஐ.நா அமைத்த நிபுணர் குழு தெளிவாகக் கூறியுள்ளது.
இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டதுடன், மொழி அந்தஸ்தும் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு சம உரிமையும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில சுயாட்சியும் வழங்கப்பட்டால்தான் இலங்கையை ஒன்றிணைக்க முடியும்” என்றார் அவர். இந்த நிலையில் இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதில் ஈழத் தமிழர் விவகாரத்தை எழுப்புவதற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீர்மானித்துள்ளன
No comments:
Post a Comment