Headlines News :

Meenakam News World

Home » , , , , , » வெண்ணை திரண்டு வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து - மா. க. ஈழவேந்தன்

வெண்ணை திரண்டு வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து - மா. க. ஈழவேந்தன்

Written By Eve on Monday, July 11, 2011 | 4:53 AM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் ஏக்க நிலைக்கு தள்ளி விடும்.

ஈழத் தமிழினத்தால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஒட்டி மாறுபட்ட கருத்தில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பேரழிவைத் தடுக்க முடியுமா என்பது பெரும் கேள்வி எனினும் இன்றைய சூழ்நிலையில் எமக்கு வேறு மாற்று இயக்கமில்லை. விலை போவதற்கென்றே பிறந்த டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி. டி. பி. இயக்கம் சரி, கிழக்கில் கருநாகமாக விளங்குகின்ற கருணாவின் இயக்கம் சரி, அவரின் அடிவருடியாக தொடங்கி தான் ஒரு தனி இயக்கம் என்று காட்ட முயலும் பிள்ளையான் சரி, அரசியலில் அழுகு தொழு நோயாளியாக விளங்கும் ஆனந்தசங்கரி சரி, சிந்தை கலங்கிய சித்தார்த்தனின் புளொட் இயக்கம் சரி, நாம் ஒரு பொருளாகக் கொள்ள முடியாத விலை போன இயக்கங்கள். அவர்களை நாம் ஒரு பொருளாகக் கொண்டு நாம் திறனாய்வு செய்வது எம் நேரத்தை வீணாக்குவதாகும். கஜேந்திரகுமாரையும், கஜேந்திரனையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடைபெற்ற தேர்தலில் அரசியல் தெளிவோடும் கொள்கைக் கோட்பாடோடும் தேர்தலில் குதித்த போதும் அன்று நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக தோல்வியைத் தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டது. இவர்கள் இருவரையும் உள்வாங்கிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பின் இன்று நிலவும் தடுமாறும் தன்மையையும் தடம் புரளும் தன்மையையும் தவிர்த்திருக்க முடியும். தமிழினத்தின் சாபக்கேடு இவ்விரு கட்சிகளின் மோதலுக்கு வழி வகுத்தது. நடந்தது நடந்தவையாக இருக்க இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் கேள்விக் குறியுடன் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் என்று நாம் கூறவில்லை. முன்னே கூறிய காட்டிக் கொடுப்பவர்களோடு இவர்களை இணைக்க நாம் விரும்பவில்லை.

கை விடும் கணவனும் பலவீனமான கணவனும் பயனற்றவர்களே

ஒரு குடும்ப வாழ்வில் தன் மனைவியைக் கைவிடுகின்ற கணவன் சரி, தன் மனைவியின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத கணவன் சரி, முடிவில் தன் மனைவியைக் கைவிட்டதாகவே கொள்ளப்படும். A betraying husband is dangerous but a weak husband is equally bad. எம்மைப் பொறுத்த வரையில் தன் மனைவியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றமுடியாத பலவீனமான கணவனாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்சி அளிக்கிறது. கைவிட்ட கணவன் சரி, தன் மனைவியின் தேவையை நிறைவு செய்யமுடியாத கணவன் சரி, பயனற்றவர்களாகத் தான் கொள்ளப்படுவர். நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற ஒரு தலைவன் அல்லது இயக்கம் தான் இன்று எமக்குத் தேவை . நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எம்மால் கணிக்க முடியாது. கட்சியின் தலைவர் ஆற்றல் வாய்ந்த வழக்கறிஞர்; வழக்கை வெல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு; ஆனால் கொள்கை உறுதியோடு செயற்படும் திறன் அவருக்கு உண்டென்பதை நாம் ஏற்க முடியாது. HE IS AN ABLE ARTICULATED LAWYER WHO CAN WIN A CASE BUT we are DOUBTFUL WHETHER HE CAN WIN A CASUE . வாதத் திறமையோடு வழக்கை வெல்லும் ஆற்றல் அவருக்கு உண்டு. ஆனால் உள்ள உறுதியோடு கொள்கையில் தொலைநோக்கு சிந்தனையுடன் வெற்றி பெரும் ஆற்றல் அவருக்கு உண்டோ என்பது ஐயத்துக்குரியது. அவர் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரி, ஆவது அறிதல் நிலையில்- தொலைநோக்கு சிந்தனையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு கட்டுப்பட்டு தொடர்ச்சியாக இயங்குகின்றனர். மகிந்த ராஜபக்ச சரி, ஆளும் சிங்கள கட்சி சரி, அல்லது எந்த சிங்கள கட்சி சரி எமது வெளிப்படையான எதிரிகள் என்பதை காலம் உணர்த்தி நிற்கிறது.

1948 ல் இருந்தே நாம் ஏமாற்றப்படுகிறோம்

1948 ல் இலங்கைக்கு விடுதலை கிடைத்ததாக சொல்லப்படினும் அது வெள்ளையர் ஆட்சிக்குப் பதில் சிங்கள ஆட்சிக்கு வழி வகுத்தது. 1920 களிலேயே சேர். பொன். இராமநாதன் , சேர். பொன். அருணாசலம் போன்ற பெரும் தலைவர்கள் சிங்கள தலைமைப் பீடத்தால் ஏமாற்றப்பட்டு, ஏக்கத்தோடு தம் வாழ்வை முடித்துக் கொண்டனர். அவற்றின் விரிவு இப்பொழுது வேண்டாம். ஆனால் 1948 தொடங்கி 2011 வரையான 63 ஆண்டுகள் சிங்கள தலைவர்களால் தமிழ்த் தலைவர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டதையே நாம் கண்டுள்ளோம். திரு. ஜி.ஜி. பொன்னம்பலம், திரு. சுந்தரலிங்கம் போன்றோர் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்டதோடு ஏமாறுவதற்கும் ஆயத்தமாக இருந்தனர். பதவி மயக்கத்தில் அவர்கள் செய்த காட்டிக்கொடுப்புகள் தமிழினத்திற்கு மீள முடியாத அழிவைத் தந்தது. மலையக தமிழ் மக்களை காட்டிக்கொடுத்த பொன்னம்பலத்தின் வஞ்சனையை வரலாறு மறக்காது. அரச ஆதரவோடு நடைபெற்ற சிங்கள குடியேற்றத்தைக்கூட அவர் எதிர்த்ததற்கு சான்றில்லை. மெத்தப் படித்த மேதை சுந்தரலிங்கம் 1936 தன் கணித மூளையை வைத்துக்கொண்டு தனியே சிங்களவரைக் கொண்ட அமைச்சரவை உருவாகுவதற்கு வழிவகுத்தார். இதனை pan sinhala cabinet என்று ஆங்கிலத்தில் குறிப்பர். ஆனால் இதே சுந்தரலிங்கம் தன் தவறுக்காக வருந்தி கண்ணீர் விட்டதோடு தமிழீழம் தான் தமிழனுக்கு தீர்வு என்று காலம் கடந்த நிலையில் ஞானம் பெற்றார்.

தந்தை செல்வா செய்த ஒப்பந்தங்கள்

தந்தை செல்வா தொலைநோக்கு சிந்தனையுடன் அரசியலை நடத்திய போதும் அவர் சிங்கள தலைவர்களோடு செய்த பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், சிறிமாவோ -செல்வா புரிந்துணர்வு அனைத்தும் அவர் காலத்திலேயே கிழித்து எறியப்பட்டன. இந் நிலையில் தான் தொடர்ச்சியாக சிங்கள தலைமைப்பீடத்தால் ஏமாற்றப்பட்ட நிலையில் இணைப்பாட்சியிலும் இனிய வாழ்வு காணமுடியாது என்ற முடிவுக்கு வந்த நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழீழத் தீர்மானம் தந்தை செல்வாவின் தலைமையில் 1976 ல் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்டது. அவர் இறப்பதற்கு முன்பு இறுதி உயிலாக 1976 நவம்பர் 19 ல் இலங்கைப் பாராளுமன்றத்தில் சிங்களவன் பிடியில் இருந்து நாம் விடுபடாவிட்டால் எமக்கு வாழ்வே இல்லை, எனவே எமது இறுதித் தீர்வு தமிழீழம் தான் என்பதனை ஓங்கி ஒலித்தவர் தந்தை செல்வா. தந்தை செல்வா அடிக்கடி கூறும் சொற்றொடர் "தமிழீழத்தை எந்த சிங்களவனும் வெள்ளித் தட்டத்தில் வைத்து தரமாட்டான். தமிழீழத்தை அடைவது என்பது வில்லங்கமான காரியம் தான் . ஆனால் தமிழினம் தப்பிப் பிழைக்க வேண்டுமெனில் இதை விட எமக்கு வேறு வழியில்லை" என்று கூறிய தந்தை செல்வா 1977 ம் ஆண்டு ஏப்ரல் 26 ல் தனது 79 வது அகவையில் எம்மை மீளாத் துயரில் ஆழ்த்தி உயிர் நீத்தார்.

ஜே. ஆர் - அமிர் ஒப்பந்தம்

1977 ல் ஜே. ஆர். ஆட்சிக்கு வர முற்றிலும் எதிர்பாராத நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக திரு. அமிர்தலிங்கம் பதவி ஏற்க ஜே. ஆருக்கும் அமிர்தலிங்கத்திற்குமிடையில் மாவட்ட சபை அடிப்படையில் ஒப்பந்தம் நிறைவேறியது. இவ் ஒப்பந்தம் உப்புச்சப்பற்ற மாவட்டமாக உருவெடுத்தது. இவ் ஒப்பந்தமும் உருப்படி பெறாத நிலையில் செத்தது.

இலங்கை- இந்திய ஒப்பந்தம்

பின்பு 1987 ஜுலை 29 இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கை சார்பில் ஜே. ஆரும் இந்தியா சார்பில் ராஜீவும் கையொப்பமிட்டனர். இவ் ஒப்பந்தத்தை முதலில் எதிர்த்த நாம் சென்னை இந்து செய்தி இதழுக்கு விடுத்த அறிக்கையில் " it is a joint conspiracy by both governments ( இரு நாடுகளின் கூட்டுச் சதி) என்று குறிப்பிட்டிருந்தேன். இவ் அறிக்கையைக் கண்ட இந்திய உளவுப் பிரிவு (RAW ) சென்னையில் என் இல்லத்தில் சந்தித்த வேளையில் சீற்றத்தோடு இவ் அறிக்கையை எவ்விதம் நீங்கள் விடமுடியும் என்று கேட்டனர். அதற்கு விடையாக எமக்கு சார்பாக இதில் ஒன்றும் இல்லை என்று கூறிய நான் ஒப்பந்தத்தின் முன்னுரையில் மட்டும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணம் தமிழரின் வரலாற்றுத் தாயகம் என்ற கூற்றினை மட்டும் வரவேற்பதாக குறிப்பிட்டேன். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்று பதில் கூறினார்கள். ஆனால் இப்பொழுது 24 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் வட கிழக்கு மாகாணம் திட்டமிட்டு சிங்கள அரசினால் சிங்கள நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையில் துண்டாடப்பட்டபோதும் திட்டமிட்ட அமைதியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மாநிலங்களுக்கான ஒன்றியம்

பின்பு சந்திரிக்கா ஆட்சியில் UNION OF REGIONS ( மாநிலங்களுக்கான ஒன்றியம்) மசோதா கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கான ஒன்றியம் உருவாகுவதற்குப் பதிலாக சந்திரிக்காவின் மாமா ரத்வத்த யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சிங்கக் கொடி ஏற்றி தமிழ் மக்களை வெளியேற்றினார்.

பிரபா- ரணில் ஒப்பந்தம்

இதை அடுத்து 2001 ம் ஆண்டு பெப்ரவரி 11 ம் திகதி எங்கள் தலைவர் பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமும் காலப் போக்கில் கிழித்தெறியப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட நீங்கள் இதனை உங்களால் நிறைவேற்றமுடியவில்லையே என ரணில் விக்கிரமசிங்காவை நான் பாராளுமன்றத்தில் கேட்டபோது புன்முறுவல் பூத்த நிலையில் கையை விரித்தார்.

தொடரும் இனப்படுகொலைகள்

1956 தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் ஏற்பட்டது. 1958 ல் இனப் படுகொலை நடைபெற்றது. 1961 ல் சிங்களச் சட்டத்தை தமிழர்கள் பகுதியில் நடைமுறைப்படுத்த சிறிமாவோ அரசு முயன்ற போது அறப்போர் நடாத்திய தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். 1968 தமிழுக்கு சலுகை வழங்க முயன்ற போது சிறிய அளவில் கலவரம் வெடித்தது. 1977 ல் மீண்டும் இனக்கலவரம் ஏற்பட்டு தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள் . 1981 ல் தென்னாசியாவின் தலை சிறந்த நூலகமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 ல் தமிழர்கள் நாட்டை விட்டு- தமிழ் மண்ணில் இருந்தும் வெளியேறும் அளவுக்கு உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலை

இவை அனைத்தையும் விஞ்சுகின்ற அளவுக்கு 2009 மே மாதத்தில் வன்னியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட விடுதலைப் போராளிகளும் சாகடிக்கப்பட்டனர். ஸ்ரீலங்காவின் இவ் இனப்படுகொலைக்கு இந்தியா தலைமையில் 20 நாடுகள் துணை நின்றன. இனப் படுகொலை ஒட்டிய விபரத்தை நாம் விரிக்கத் தேவையில்லை. சனல்-4 ன் ஆவணக்காட்சியான இலங்கையின் கொலைக்களம் ( Sri Lanka 's Killing Fields ) பார்த்து விபரங்களை அறிந்து கொள்ளவும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவு

இக் கொடூர பின்னணியில் 2010 ல் நடைபெற்ற தேர்தலில் தென்பகுதியில் சிங்களவர் தலைவராக மகிந்தா தெரிவு செய்யப்பட்டார். தமிழர்கள் வேறு வழியற்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்தனர். அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக 8 பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. உத்தியோகப்பற்றற்ற நிலையில் எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்ததோ நாம் அறியோம். இப் பேச்சுவார்த்தைகளில் அதிகாரப் பரவல் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. வட-கிழக்கு இணைப்பு மறக்கப்பட்டுள்ளது. 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துக என்று ஸ்ரீலங்கா அரசை இந்திய அரசு கேட்டுள்ளது. இதை மறுத்த சிங்கள அரசு காணியையும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாதென வெளிப்படையாக கூறுகிறது. எட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பலருக்கே என்ன பேசப்பட்டது என்பது தெரியாது. இதன் மர்மம் யாதோ? எனினும் தாம் பேசியதை ஒட்டி மகிந்த அரசு ஒரு அறிக்கை தரவேண்டும் என்று சம்பந்தர் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கிறது. மகிந்த அரசோ பேச்சு வார்த்தையின் குறிப்பை எழுத்தில் தருவதாக கூறிய நிலையிலும் தட்டிக்கழிக்கிறது. மகிந்த அரசு தாம் ஒரு தெரிவுக் குழுவை அமைத்து தீர்வு காணப் போவதாகக் கூறுகிறது. ஏமாற்றியது போதும் இனியும் ஏமாற்றாதே, தெரிவுக் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. தமக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை அற்ற நிலையிலும் வல்லரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும் இந்தியாவின் நெருக்குதல் காரணமாகவும் தாம் விரும்பாத நிலையிலும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து கலந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

எம்மைப் பொறுத்தவரையில் தமிழினத்தை உங்களால் காப்பாற்றமுடியாவிடினும் மேலும் தமிழினத்தை படுகுழியில் தள்ளாது பேசியது போதும் என்ற நிலையில் வெளியே வாருங்கள். டக்லஸ், கருணா போன்ற கயவர் கூட்டம் பாராளுமறத்தில் தலைதூக்காதிருக்க நீங்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து எமக்காக குரல் எழுப்புங்கள். பாராளுமன்றத்துக்கு உள்ளே நாம் முன்பு செய்தது போல் உலகின் கவனத்தை ஈர்க்கின்ற முறையில் ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றை செய்யுங்கள்.

மாவை சேனாதிராஜா கூறியதற்கமைய மக்கள் ஆட்சி அடிப்படையில் அறப்போரை நடத்துங்கள். பாராளுமன்றத்தில் வெட்டி விழுத்தி வேலியோடு சாய்ப்பதற்கு உங்களுக்கு ஒன்றும் இல்லை எனிலும் யார் பாராளுமன்றத்தில் இருக்கிறார் என்பதற்கு மேலாக யார் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இப்போதைக்கு பாராளுமன்றத்தில் உங்கள் பணி தொடரட்டும் . சூழ்நிலை மாறும் போது புதிய சிந்தனைகள் உருவாகக் கூடும். தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு பெரிது. ஈழத் தமிழர் இன்னல் நீங்க இணையத்தோடு இணையுங்கள். நாடு கடந்த தமிழீழ அரசு உங்களுக்கு பக்க துணையாக அமைய உலகெங்கும் உங்கள் பரப்புரையை தொடருங்கள். உடனடியாக தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் திரண்டு வரும் தமிழக மக்களின் சக்தியையும் உங்கள் சார்பில் குரல் எழுப்ப வையுங்கள். தமிழகம் ஈழத்து மக்கள் சார்பில் தொடர்ந்து ஓங்கிக் குரல் எழுப்பின் டெல்லி நீண்ட நாட்களுக்குத் தட்டிக் கழிக்க முடியாது. கட்சி கடந்த நிலையில் தமிழகத் தலைவர் அனைவரும் உங்களுக்குத் துணை நிற்க ஆயத்தம் என்று அறியத் தந்துள்ளார்கள். உலகம் எம் சார்பில் கருத்துத் தெரிவிக்கின்ற சூழல் உருவாகிக்கொண்டிருகிறது. இந்த சூழலை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டியது உங்களது கடமையாகும். வேறு வழியற்ற நிலையில் நீங்கள் தான் ஏதாவது செய்வீர்கள் என்று தமிழினம் எதிர்பார்க்கின்றது. நம்பிய தமிழினத்தை நடுக் கடலில் தத்தளிக்க விடாதீர்கள்.

மா. க. ஈழவேந்தன்

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger