Headlines News :

Meenakam News World

Home » , , » மழைவிட்டாலும் தூவானம் தொடர்கின்றது

மழைவிட்டாலும் தூவானம் தொடர்கின்றது

Written By Eve on Sunday, July 31, 2011 | 5:31 AM

மழை விட்டாலும் இன்னும் தூவானம் தொடர்கிறது. உள்ளுராட்சித் தேர்தல் முடிவடைந்தும் வடக்கின் அதன் சூடு தணியவில்லை. பழிவாங்கும் படலங்கள் ஒரு பக்கம் சூடு பிடித்துக் காணப்பட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்ளை, தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கி விட்டன.

தேர்லில் அரசுக்கு எதிராக வாக்களித்த வட மாகாண அரச அதிகாரிகளின் விபரங்கள் தேடி எடுக்கப்பட்டு அவர்களைப் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தேர்தலுக்காகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாக்குதல்கள் உதயம் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதலுடன் மீண்டும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டன. அபிவிருத்தி என்ற போர்வையில் தேர்தல் பம்மாத்தாக அறிவிக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நடப்பட்ட அனைத்து விடயங்களுமே இப்போது சமாதி நிலை அடைந்துவிட்டன.

இவையனைத்தும் வடக்கின் அரசு சார்பு அரசியல் கரங்களால் மேற்கொள்ளப்படும் கொடும் நடவடிக்கைகள்.
.
இது ஒரு புறமிருக்க, தெற்கின் சிங்கள அரசு இப்போது வடக்கின் மீது தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. இதற்கும் காரணம் தேர்தல் தோல்வியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபரிமிதமான வெற்றியுமே ஆகும்.

தோல்வியையும் வெற்றியையும் தாங்கிக் கொள்ள முடியாத சிறிலங்கா அரசும் அதன் சகாக்களும் இன்று தமிழர் பிரதேசத்தில் தங்களது வஞ்சனையைத் தீர்க்க வரிந்து கொண்டு எழுந்தும் விட்டனர்.

இதன் முதல் கட்டமாக, வடக்கின் உள்ளுராட்சி சபைகளுக்கான நிதியை சிறிலங்கா அரசு மீளப் பெற்றுக்கொள்ளும் நிலை எழுந்துள்ளது. உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கை அபிவிருத்தி செய்து காட்டட்டும் என்று இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளதனை இதற்குத் தெளிவான சான்றாக எடுத்துக் கொள்ள முடியும்

சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்குப் பல படிகள் மேலே சென்ற நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சில விடயங்களைச் சொல்லியிருந்தார். ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரா இவ்வாறு கூறுகிறார் என தமிழ் மக்கள் நிச்சயம் அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ மாட்டார்கள். சிங்கள தேசம் இதுதான் என்பது இந்த நாட்டின் தமிழ் மக்களால் கடந்த 60 வருடங்களுக்க மேலாக உணரப்பட்ட உண்மை.

ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில் நிலையில் இவ்வாறு துணிச்சலாகத் தனது அரசின் இனவாதக் கருத்தை அப்பட்டமாகக் கூறியிருக்கிறார் என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியைத் தமிழ் மக்களின் ஆணை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணை குறித்துப் பேசுகிறது. ஆனால் ஜனாதிபதிக்கு முழு நாடுமே ஆணையை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் உண்மையில் தெரு விளக்குகளை பொருத்துவதற்கும் தண்ணீர்க் குழாய்களை அமைப்பதற்கும் தான் அதிகாரம் கொண்டது. அதற்கே கூட்டமைப்புக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பின்படி மக்களின் ஆணை என்பது கருத்து வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஜனாதிபதி மூலமோ நாடாளுமன்றத் தேர்தல் மூலமோ தான் பெறப்பட வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்திருப்பதானது, சிங்கள இனவாத்தினது உச்சம் என்றே சொல்ல முடியும். தென்னிலங்கையில் 45 உள்ளுராட்சிச் சபைகளை சிங்கள அரசின் ஆளுங்கட்சி வெற்றி கொண்டுள்ள நிலையில்,தான் தெரிவித்துள்ள கருத்தானது இந்த 45 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆளுங்கட்சிக்கும்  பொருத்தமானதா என்பதனையும் அவர் சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் சொல்லாவிடின் இது அவரின் சிங்கள இன வெறித்தன்மையின் வெளிப்பாடு என்று கூறுவதில் எந்தக் குற்றத்தையும் காண முடியாது. அத்துடன் தமிழர் தாயகத்தில் சிங்களக் கட்சிகளின் கோலேதச்சுத்தனத் தேவையையே இது வெளிச்சம் போட்டும் காட்டுகிறது.

அது மட்டுமன்றி வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்று தேவை இல்லை என்பதனையும் அனைத்தையுமே தென்னிலங்கைச் சிங்கள அரசே பார்த்துக் கொள்ளும் என்பதனையும் அவரது கருத்து கோடிட்டுக் காட்டுகிறது.

தேர்தல் காலத்தில் கூண்டாக வட பகுதிக்குச் சென்று தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டுக் கெஞ்சிக் கூத்தாடிய சிங்கள அமைச்சர்களில் முதல் நிலை வகிப்பவர் பஸில் ராஜபக்ஷதான். தமிழ் மக்களே எமக்கு ஆணை வழங்குங்கள் உங்களது விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் எனக் கெஞ்சி நின்ற இந்த அமைச்சர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். “மக்களின் ஆணை என்பது கருத்து வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஜனாதிபதி மூலமோää நாடாளுமன்றத் தேர்தல் மூலமோ தான் பெறப்பட வேண்டும் என்று” அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் மக்களை தேர்தல் காலத்தில் எவ்வாறெல்லாம் நயவஞ்சகத்தனமான ஏமாற்ற முயற்சித்துள்ளார் என்பது வெளிப்படையாகிறது.
.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ப. அரியநேத்திரன் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சரியான பதிலை வழங்கியுள்ளார்.
.
வடபகுதிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த 35 அமைச்சர்களும் ஜனாதிபதியும் தெரு விளக்கு போடவும் குழாய் நீர் வழங்கவுமே பாடுபட்டனர் என தற்போது தெரியவந்துள்ளது.ஆனால் இதற்கு கூட இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் நினைத்ததால்தான் அவர்களுக்கு வாக்களிக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர்.எனவே இந்த அரசாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியும்  தாங்கள் தெருவுக்கு விளக்கு போடுவதாக கூறுவதைக் கூட தமிழ் மக்கள் நம்புவதாக இல்லை. மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறுவது போன்று உற்று நோக்கினால் தமிழ் மக்கள் தெருக்களுக்கு விளக்கு போடுவதை எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கான உரிமையை வெல்ல வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். என்பதாக அரியநேத்திரன் பதிலளித்திருந்தார்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைப்பு நடத்த முடியுமா அப்படியெல்லாம் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த சிங்கள அரசுகள் தொடர்ந்தும் அதே பாணியில் செல்லவே முயற்சிக்கின்றன என்பதற்கும் பஸிலின் கருத்துகள் இன்னொரு ஆதாரமாக அமைந்துள்ளன. ஆனால், அன்று ஏமாந்த தமிழ் சமூகம் அதே நிலையில் இன்று இல்லை என்பதனை அவர் இப்போது நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

இது ஒரு புறமிருக்க சிறிலங்கா அரசாங்கமானது அரசியல் தீர்வு ஒன்றினை வழங்குவதற்குப் பதிலாக பொருளதார ஸ்திரத்தை தம் மத்தியில் வலிந்து ஏற்படுத்த முனைவதாக யாழ்ப்பாண மக்கள் குற்றம்  சுமத்தியுள்ளனர்.அரசியல் தீர்வுக்காகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதாகவும் யாழ்ப்பாண மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர் என ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளதனையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. அரசின் இந்தப் போக்கை கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில் கூறப் போனால் வடக்கில் சிறிலங்கா அரசு தரப்பு வெற்றி பெற்றிருந்தால் கூட சிங்கள அரசியல் தலைவர்களின் இனவாத கொள்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டும் உண்மை. இதனை அமைச்சர்களான பஸிலும் சம்பிக்க ரணவக்கவும் நிரூபித்து விட்டனர்.

ஆனால் ஒன்று.. ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருப்பான் என்ற பழமொழி இனி தமிழ் இனத்துக்கு ஒத்துவராது என்பதனை சிங்கள தேசத்துக்குத் தமிழ் மக்கள் தெரிவித்துவிட்டனர் என்பதனை சிங்கள தேசம் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும்.

கொழும்பிலிருந்து ஈழநாதத்துக்காக சித்தன்..

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger