பல ஆண்டு காலங்களுக்குப் பின்னர் தற்போது அரம்பிக்கப்பட்டுள்ள இந்திய – சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையின் மூலம், தென்னிந்திய முகாங்களில் வாழும் சிறிலங்காத் தமிழ் அகதிகள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையராலயம் [UNHER] வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தென்னிந்திய முகாங்களில் வாழும் சிறிலங்கா அகதிகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவை மூலம், தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்ற எண்ணிக்கை, தற்போது மிக மெதுவாக உயர்ந்து வருகின்ற போதிலும் அடுத்த அரை ஆண்டுக்குள் இத்தொகை மேலும் அதிகரிக்கும்" என சிறிலங்காவுக்கான UNHER பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவையானது, கடந்த யூன் மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இக்கப்பல் சேவை அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கப்பல் சேவையின் மூலம், இந்திய நடுத்தர வர்த்தகர்கள் குறிப்பாக புடைவை வியாபாரிகள் மிக்க பயன்பெறுகின்றனர்.
"உலகில் வாழும் புலம்பெயர் சிறிலங்கர்களில் 141,000 பேர் வரையானவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதித் தஞ்சம் கோரி வாழ்கிறார்கள்" என யூன்.என்.எச்.சீ.ஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 2800 வரையிலான சிறிலங்கர்கள் தாம் மீண்டும் தமது சொந்த நாட்டுக்குச் செல்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 களின் நடுப்பகுதியில் சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததையடுத்து, பெரும்பாலான சிறிலங்கர்கள் குறிப்பாக தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து இந்தியா மற்றும் வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.
2009 ல் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததையடுத்து, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கான நிலக்கண்ணிவெடி அகற்றல் பணி மிக மெதுவாக நடைபெறுவதன் காரணமாக மீள் குடியேற்றப் பணிகளும் மிக மெதுவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. யுத்தம் இடம்பெற்ற போது இந்தப் பகுதிகளில் சிறிலங்கா அரச படைகளும் விடுதலைப் புலிகளும் பெருந்தொகையான நிலக்கண்ணிவெடிகளைப் புதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள கிராமமக்கள் நிலக்கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வுக் கல்வியைப் பெறுகின்றனரா என்பது தொடர்பாக யு.என்.எச்.சீ.ஆரானது தொடர்ச்சியான கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் இந்த மக்களுக்கான உணவுப்பங்கீடு தொடர்பாகவும் இந்நிறுவனம் தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
அத்துடன் மாற்றுவலுவுடையோர் மற்றும் முதியோர் தொடர்பான தேவைப்பாடுகளை ஆராய்ந்து இவர்கள் தொடர்பாக சிறப்பு தேவைப்பாடுகளைக் கவனிக்கும் நிறுவனங்களிடம் தெரிவிக்கும் பணிகளையும் யூ.என்.எச்.சீ.ஆரானது மேற்கொள்கின்றது.
அத்துடன் பொருத்தமான அரசாங்க நிறுவனங்களின் ஊடாகவோ அல்லது ஏனைய நிறுவனங்களின் ஊடாகவோ இந்த சிறப்பு தேவைப்பாடுடையவர்களுக்கான உளவளத்துணையையும் ஆற்றுகின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையராலயத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home »
ஈழத்தமிழர்
,
தகவல்
,
தமிழ்நாட்டில்
,
தாயகம்
,
திரும்ப
,
வாழும்
,
விருப்பம்
» தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர் தாயகம் திரும்ப விருப்பம் - ஐநா தகவல்
தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர் தாயகம் திரும்ப விருப்பம் - ஐநா தகவல்
Written By Eve on Sunday, July 17, 2011 | 3:51 AM
Labels:
ஈழத்தமிழர்,
தகவல்,
தமிழ்நாட்டில்,
தாயகம்,
திரும்ப,
வாழும்,
விருப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment